தேசிய சிறு தொழில் கழகம் சார்பில், மூலப்பொருள் வாங்க கடனுதவி பெறுவது குறித்த கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில், நேற்று (12-10-2018) நடைபெற்றது.
இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் திறன் மேம்பாட்டு குழு தலைவர் திரு.அருண் ராமசாமி தலைமை வகித்தார்.
தேசிய சிறு தொழில் கழக இயக்குனர் திரு.உதயகுமார் பேசியதாவது:
மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்களிடமிருந்து பல்வேறு வகை பொருட்களை கொள்முதல் செய்கின்றன. இதற்கான டென்டர்களில் பங்கேற்க, பதிவு செய்வது அவசியம்.சிறு, குறு நிறுவனத்தினர், அரசு, பொதுத்துறை நிறுவன ஆர்டர்களை பெறுவதிலும், பதிவு செய்வது, டென்டரில் பங்கேற்பதிலும் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். தேசிய சிறு தொழில் முதலீட்டு கழகம், சிறு, குறு நிறுவனங்கள், அரசு, பொதுத்துறை நிறுவன ஆர்டர்களை பெற அனைத்து வழிகாட்டுதல்களையும் வழங்குகிறது.நேரடியாக வங்கிகளை அணுகுவதைவிட, தேசிய சிறு தொழில் முதலீட்டு மையம் வாயிலாக அணுகினால், மிக எளிதாக வங்கி கடன் பெறமுடியும்.
தொழில் முனைவோர், கடன் பெறுவதற்காக சமர்ப்பிக்கும் ஆவணங்களை, முதல்கட்டமாக சிறு தொழில் முதலீட்டு மையம் ஆய்வு செய்துவிடும். ஏதேனும், தவறு இருந்தால், கண்டறியப்பட்டு, சரிசெய்யப்பட்டு விடும். எனவே, சிறு தொழில் கழகம் வாயிலாக விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், வங்கி கடன் பெறுவதில் சிக்கல் ஏதும் ஏற்படாது. இவ்வாறு, அவர் கூறினார். ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு உறுப்பினர் ஸ்லீக் ராமசாமி, தேசிய சிறு தொழில் கழக கோவை மண்டல முதன்மை மேலாளர் கண்ணன், நிப்ட் டீ இன்குபேஷன் மைய தலைவர் பெரியசாமி மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனத்தினர் பலர் பங்கேற்றனர்.