மத்திய சிறு, குறு நிறுவன அமைச்சர் திரு. கிரிராஜ் சிங், 19 மே 2018 அன்று திருப்பூர் வருகைதந்தார்; முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரிக்குச் சென்ற அமைச்சர், கல்லுாரி கட்டமைப்பு, ஆய்வகங்கம், ஆடை உற்பத்திக்கான தொழில் பயிற்சி கூடங்களை பார்வையிட்டார். அதன்பின், ஏற்றுமதியாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
ஏற்றுமதியாளர் சங்கம், 'சைமா', 'நிட்மா', 'சிம்கா' மற்றும் தொழில் பாதுகாப்புக் குழுவினர், உள்பட தொழில் அமைப்பு பிரதிநிதிகள், அமைச்சர் கிரிராஜ்சிங்வுடன் கலந்துரையாடினர்.
அமைச்சரிடம் தொழில் துறையினர் அளித்த மனு:
ஜி.எஸ்.டி.,க்கு பின் டியூட்டி டிராபேக், 2 சதவீதமாக குறைக்கப்பட்டது. வர்த்தக போட்டிகளை சமாளிக்க, சலுகையை உயர்த்தி வழங்கவேண்டும். பேக்கிங் கிரெடிட்டுக்கான 3 சதவீத வட்டி மானியத்தை, 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஐரோப்பா, கனடா நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவேண்டும். திருப்பூரில் ஆயத்த ஆடை, நிட்டிங், டிசைனில் தொழில் வளாகம் அமைக்க, அனுமதி வழங்க வேண்டும். பின்னலாடை வாரியம் அமைக்க வேண்டும். வங்கி கடன் வழங்குவது, வட்டி நிர்ணயிப்பதில், 'பேஷல்' விதிகளை பின்பற்றக்கூடாது.
ஜாப் ஒர்க் நிறுவனங்கள், 50 கிலோ மீட்டர் துாரம், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான சரக்குகளுக்கு, 'இ- வே' பில்லில் இருந்து விலக்கு, கைவிடப்பட்ட 'லீன்' திட்டம், பார்கோடு, தரச்சான்று பெறுவதற்கான சலுகை திட்டங்களை, மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.
சுத்திகரிப்பு மையங்களுக்கான 12 சதவீத வரியை, 5 சதவீதமாக குறைக்கவேண்டும். ஜாப் ஒர்க் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி., ரீபண்ட் பெறுவதில் உள்ள சிக்கல்களை களையவேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை இடம் பெற்றிருந்தன.