நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், 50 சதவீதத்துக்கு மேல், திருப்பூரின் பங்களிப்பு உள்ளது. கடந்த, 2014-15ம் நிதியாண்டில், 21 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம்,2015-16ம் நிதியாண்டில், 23 ஆயிரம் கோடியை எட்டிப் பிடித்தது. ஏற்றுமதி வர்த்தகம், உள்நாட்டு வர்த்தகம் என, இரண்டு வகையான தொழில் பயணத்தில், ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு, வரும், 2020ம் ஆண்டில், ஒரு லட்சம் கோடி ரூபாயாக உயர வேண்டும் என, திருப்பூரின் தொழில் துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஒவ்வொரு நிதியாண்டும், வங்கிகளில் நடைபெற்றுள்ள அன்னிய செலாவணி பண பரிவர்த்தனை விவரங்களை பெற்று, அதன் அடிப்படையில், ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பை மதிப்பீடு செய்கிறது. வரும் மார்ச் மாதத்துடன், 2016-17ம் நிதியாண்டு நிறைவடைகிறது. நடப்பு நிதியாண்டுக்கான வர்த்தக மதிப்பை கணக்கிடும் பணிகள், தற்போது நடந்து வருகின்றன. நடப்பு நிதியாண்டில், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, 25 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என, திருப்பூர் தொழில் துறையினர் நம்புகின்றனர்.
ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டில், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, 30 ஆயிரம் கோடியை எட்டும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிந்ததால், அந்நாட்டின் பணமாகிய பவுண்ட் மதிப்பு சரிந்தது. பிரிட்டனில் இருந்து பெற்ற ஆர்டர்களுக்கான மதிப்பு, 20 சதவீதம் வரை சரிந்தது. புதிய ஆர்டர்களுக்கு, கூடுதல் விலை கொடுக்க "பையர்'கள் மறுக்கின்றனர்.
பிரிட்டன் நாட்டு ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள தாக்கம், ஆடை ஏற்றுமதி துறையை பாதிப்படைய செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் நவ., மாதம் வரையிலான நமது நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, 35,550 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இம்மதிப்பு, 55 ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.எதிர்பார்த்த அளவு உயர்வு கிடைக்காத போதும், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம், 25 ஆயிரம் கோடியை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. "டெக்னிக்கல் டெக்ஸ்டைல்' துறையை நிறுவி, மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது; தொழில் மேம்பாட்டுக்கான ஆய்வகங்களும் உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.