அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் டெக்ஸ் வேர்ல்ட் ஜவுளி கண்காட்சி புதன்கிழமை துவங்கியது. கண்காட்சி 3 நாட்கள் நடைபெறும்.
தமிழ்நாடு அரசின் ஜவுளித்துறை சார்பாக அமைக்கபட்ட தமிழ்நாடு வளாகத்தை அமெரிக்காவிற்கான இந்திய தூதர் பினாய ஸ்ரீகாந்த பிரதான் திறந்து வைத்து பார்வையிட்டார்.
நிகழ்வில் தமிழ்நாடு அரசின் ஜவுளித்துறை செயலாளர் அமுதவல்லி, கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் தீபக், இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு சார்பாக கோபாலகிருஷ்ணன், உண்ணிகிருஷ்ணன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி செயற்குழு உறுப்பினர் ராமு அவர்களும் கலந்து கொண்டனர்.
திருப்பூர், சென்னை, கரூரை சேர்ந்த 20 ஏற்றுமதியாளர்கள் அரங்குகளை அமைத்து தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு முறை காரணமாக இந்தியாவின் ஜவுளித்துறைக்கு சாதகமான சூழல் நிலவும் இந்த காலகட்டத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு இந்த கண்காட்சியில் பங்குகொண்டு அரங்கங்களை அமைக்க மானியம், விமான செலவில் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டது. திருப்பூரை சேர்ந்த 10 நிறுவனங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
இந்தியாவிற்கான வர்த்தக வாய்ப்புகள், தூதரகம் எவ்வாறெல்லாம் உதவ இயலும் குறித்து அமெரிக்காவிற்கான இந்திய தூதர் பினாய ஸ்ரீகாந்த பிரதான் விளக்கமாக எடுத்து கூறினார்.
சரக்குகளை பெற்றுக்கொண்டு பணம் தர மறுக்கும் இறக்குமதியாளர்களை கையாள்வது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பிரதிநிதிகள் கேட்டபொழுது அதற்கான வழிகளை தெரிவித்ததோடு, அங்குள்ள சட்ட நடைமுறைகள் குறித்து விவரித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஜவுளித்துறை அமைச்சர் காந்தி, அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
Published on: 22nd July 2025
Source: Covaimail