Tags


இந்தியா பின்னலாடை உற்பத்தியில் நிதியாண்டு 2024-25இல் ரூ.40,000 கோடியைக் கடக்கும் என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவர் தெரிவித்தார்.

உலகளாவிய ஆடை ஏற்றுமதி சந்தையில், 3.9 சதவிகிதப் பங்குடன் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், கடந்தாண்டு ஏற்றுமதி வருவாயைவிட இந்தாண்டில் அதிகமாய் இருக்கும் என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவரும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (TEA) நிறுவனருமான ஏ. சக்திவேல் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, ``உள்நாட்டு நுகர்வுக்கு ரூ. 27,000 கோடி மதிப்புள்ள ஆடைகளை வழங்குவதுடன், 15 முதல் 18 சதவிகிதம் என்ற அளவில் வளர்ந்துவரும் திருப்பூர், கடந்தாண்டு சுமார் ரூ. 35,000 கோடி மதிப்பில் ஏற்றுமதி வருவாயைக் கொண்டிருந்தது. இந்தாண்டில் ரூ. 40,000 கோடியையும் கடக்கும்.

பின்னலாடை ஏற்றுமதியில் 54 சதவிகிதத்துக்கும் அதிகமான பங்கைக் கொண்ட திருப்பூரில், கரோனா தொற்று, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம், தொழிலாளர் பற்றாக்குறை, ரஷியா - உக்ரைன் மோதல், மேற்கத்திய சந்தைகளில் பொருளாதார மந்தநிலை முதலான பிரச்னைகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இருப்பினும், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் மற்றும் வங்கதேசத்தில் நிலவும் அமைதியின்மை உள்ளிட்ட வர்த்தக இயக்கவியல் மாற்றத்தால், திருப்பூர் ஏற்றுமதியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கலாம்.

 

திருப்பூரின் உற்பத்தியில் 35 சதவிகிதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னணி கம்பெனிகளுக்கும், மற்றொரு 35 சதவிகிதம் அமெரிக்காவுக்கும், சுமார் 10 சதவிகிதம் மத்திய கிழக்கு மற்றும் கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

 

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும், ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

 

பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகள் நிறைவேறியதும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான வங்கதேசத்தின் ஒப்பந்தம் 2027 ஆம் ஆண்டுடன் காலாவதியாகி விடும். இதன்மூலம், ஆண்டு வளர்ச்சி 35 முதல் 40 சதவிகிதத்தை அடையும்’’ என்று தெரிவித்தார்.

 

Published on: 09th March 2025

Source: Dinamani

e-max.it: your social media marketing partner