கடந்த 30 ஆண்டு காலமாக ஏற்றுமதி தொழில் வளர்ச்சி பெற தொழிலாளர்கள்-தொழில்முனைவோர் இடையே சமூக உறவு இருப்பதே காரணம் என ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம். சுப்பிரமணியன் பேசினார்.திருப்பூர் தொழில் பங்களிப்போர்-முனைவோர் அமைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் திருமுருகன்பூண்டியில் நேற்று நடந்தது.
இதில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் பேசியதாவது: திருப்பூரில் பனியன் தொழில் நன்றாக இருக்க வேண்டும். இதுபோல் தொழிலாளர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். கடந்த 30 ஆண்டுகளாக திருப்பூர் ஏற்றுமதி தொழில் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. தொழில் முனைவோர்- தொழிலாளர்களுக்கு இடையே சுமூக உறவு இருப்பதே முக்கிய காரணம்.
ரூ.35 ஆயிரம் கோடி ஏற்றுமதியும், ரூ. 30 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு வர்த்தகமும் நடைபெறுகிறது. 10 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இதனை உலக நாடுகள் ஆச்சர்யமாக பார்க்கின்றன. மனித வளத்துறை அதிகாரிகளும் நிறுவனங்களுக்கு பக்கபலமாக இருப்பதால், நிறுவனங்களும் வளர்ச்சி பெற்றுள்ளன. தொழிலாளர்களிடையே நேரடி தொடர்பில் பல்வேறு நிறுவன உரிமையாளர்கள் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி பேசியதாவது: மரம் வெட்டுபவர் கோடாரியை பட்டை தீட்டிக்கொண்டு வெட்டும்போது வேகமாக வெட்வார். அதுபோன்று, தொழில்துறையின் மனித வள மேம்பாட்டுத்துறையில் இருப்பவர்களை பட்டைதீட்டும் இடமாக இந்த பயிற்சி களம் உள்ளது. நிறுவன உரிமையாளருக்கும், தொழிலாளிக்கும் இடையே பாலமாக, பக்கபலமாக இருப்பவர்கள் தான் மனிதவள மேம்பாட்டு நிறுவன மேலாளர்கள். உரிமையாளரின் எதிர்பார்ப்பையும், தொழிலாளர்களின் தேவையை சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பவர்கள்.
இதனை பதவியாக கருதாமல், பொறுப்பாக கருதும்போது இரண்டு தரப்பிலும் இடம் பிடிப்பார்கள். நாம் எந்த நிலைக்கு சென்றாலும் நம் குணங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பொறுமையும், சகிப்புத்தன்மையுடன் பணியிடத்தில் இருப்பவர்கள் உச்சம் பெறுவார்கள். மன அழுத்தமின்றி பணியாற்றுங்கள். ஒவ்வொரு நாளும் புதியதாக துவங்குங்கள். மற்றவர்களுக்கு நல்லது செய்யுங்கள். தொழிலாளரிடம் திறமை, அனுபவம் இருக்கும். ஆகவே அதனை சரியாக பெறும்போது, நிறுவனமும் பயன்பெறும். தொழிலாளர்களும் பயனடைவார்கள்.
மணிக்கணக்கில் பணியாற்றுவதைவிட, அதனை எவ்வளவு விரைவாகவும், சிறப்பாகவும் செய்ய முடியும் என்று யோசிக்கும்போது பணியும் சிறப்பு பெறும். நேர மேலாண்மை அனைவருக்கும் முக்கியம். நம்முடைய நேரம் மட்டுமின்றி, மற்றவர்களின் நேரத்தையும் நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். தொழில்துறையில் இது மிகவும் முக்கியமாக இருக்கும். ளிப்படைத்தன்மையோடு இருங்கள். நிறைய பிரச்சினைகள், சவால்கள் வரும். அவற்றை சமாளிப்பது தான் மனிதவள மேம்பாட்டு மேலாளர்களின் மேன்மையான பணி. பணி செய்யும் இடத்தில் பிரச்சினை இருந்தால், உற்பத்தியும் பாதிக்கப்படும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் குற்றங்களும் அதிகரிக்கின்றன. பல்வேறு குற்றங்களில் பலரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுடன் நன்கு பழகுங்கள். குடும்ப விஷயங்கள் மற்றும் குடும்ப நிகழ்வுகளுக்கு சென்று வரும்போது, தொழிலாளர்களும் நல்ல மனநிலையில் பணியாற்றுவார்கள்.
மகிழ்ச்சி என்பது கடையில் வாங்கும் பொருள் இல்லை. அது உணர்வு. ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும் ஆக்கப்பூர்வமாக, மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ளுங்கள். நாட்டின் வளர்ச்சி நிறுவனங்களை பொறுத்துத்தான், நிறுவனங்களின் வளர்ச்சி மனித வள மேம்பாட்டுத்துறையும் முக்கிய பங்குண்டு. இவ்வாறு அவர் பேசினார்.
இதில், திருப்பூர் தொழில் வளம் பங்களிப்போர் அமைப்பின் தலைவர் இளங்கோவன், சமூக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவி, சங்க செயற்குழு உறுப்பினர் ராமு, பொருளாளர் கோபாலகிருஷ்ணன், ஈஸ்ட் மேன் சந்திரன், சங்க இன செயலாளர் குமார் துரைசாமி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.
Published on: 22nd November 2024
Source: Dinakaran