Tags

திருப்பூரில் 200 அரங்கங்களுடன் யார்னெக்ஸ் கண்காட்சி தொடங்கியது. இதனை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் பிராந்திய பொறுப்பாளர் சக்திவேல் திறந்து வைத்தார்.

 

திருப்பூரில் 200 அரங்குகளுடன் யார்னெக்ஸ் கண்காட்சி தொடங்கியது. இதனை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் பிராந்திய பொறுப்பாளர் சக்திவேல் திறந்து வைத்தார். திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள இந்தியா நிட் பேர் வளாகத்தில் யார்னெக்ஸ், டெக்ஸ் இந்தியா மற்றும் டைகெம் டெக்ஸ் பிராசஸ் ஆகிய முப்பெரும் தொழில் கண்காட்சி நேற்று தொடங்கியது.  இதனை ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தென் பிராந்திய பொறுப்பாளர் சக்திவேல் திறந்து வைத்து, கண்காட்சியை பார்வையிட்டார். இதற்கு கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே எம் சுப்பிரமணியன், நிட்மா சங்கத் தலைவர் அகில் ரத்தினசாமி, பொதுச் செயலாளர் ராஜாமணி, ஏற்றுமதியாளர்கள் சங்கத் துணைத் தலைவர் இளங்கோவன், பொதுச் செயலாளர் திருக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் 202 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் நவீன தொழில்நுட்பத்திற்கு தேவையான அனைத்து வடிவிலான மற்றும் புதிய புதிய வகையான நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நூல்கள் காண்கிறவர்களை கவர்ந்து வருகின்றது. தற்போது செயற்கை நூலிழையால் தயாரிக்கப்படுகிற ஆடைகளுக்கு அதிக வரவேற்பு உள்ள நிலையில், இது தொடர்பான நூல்கள் பல கண்காட்சி அரங்குகளில் இடம்பெற்றுள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலர் இந்த கண்காட்சியை பார்வையிட்டு வருகிறார்கள். இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தென் பிராந்திய தலைவர் சக்திவேல் கூறியதாவது:-  இந்தியாவின் முன்னணி நிறுவனங்களை சேர்ந்த நூல் நிறுவனங்கள் இதில் நூல்களை காட்சிப்படுத்தியுள்ளன. பல புதிய நூல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலினை பயன்படுத்தி ஆடை தயாரிப்பு மேற்கொள்ளும் போது வர்த்தகர்களை கவர முடியும். கண்டிப்பாக இந்த கண்காட்சி திருப்பூர் ஏற்றுமதிக்கு உதவும். நூல் விலை அடிக்கடி உயர்ந்து வரும் நிலையில் இந்த கண்காட்சி வர்த்தகம் வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு அவர் கூறினார். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறியதாவது:-  கண்காட்சியில் உலகத் தரம் வாய்ந்த நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது அனைத்து நாடுகளை சேர்ந்த வர்த்தகர்களையும் கவர்ந்து வருகிறது. திருப்பூர் தொழில்துறையினருக்கு இது பெரிதும் உதவும். அனைத்து தொழில்துறையினரும் கட்டாயம் இந்த கண்காட்சியில் பங்கேற்க வேண்டும். இங்குள்ள புதுமைகளை தங்களது ஆடை தயாரிப்பில் புகுத்தி வர்த்தகத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். என்றார். கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:- பசுமை ஆடை தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் நூல் கண்காட்சிகளை நடத்தி வருகிறோம். இதற்கு பல நாடுகளில் இருந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த கண்காட்சி மூலம் தொழில்துறையினர் கண்டிப்பாக பயன்பெறுவார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளது. இதனால் எதிர்பார்த்ததை விட அதிக அளவு வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினர் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு வருகிறார்கள். என்றார்.

 

Published on: 12th Sep 2024

Source: King 24x7

e-max.it: your social media marketing partner