''இந்தாண்டு 40,000 கோடி ரூபாய் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக இலக்கை அடைவோம்'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பு, அதை தொடர்ந்து ரஷ்யா - உக்ரைன் போர், பண வீக்கம் உள்ளிட்ட காரணங்களால், அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு திருப்பூரில் இருந்து பின்னலாடை ஏற்றுமதி சரிந்தது.
திருப்பூருக்கான ஏற்றுமதி ஆர்டர்கள், கடந்த பிப்., மாதத்தில் இருந்து மீண்டும் அதிகரித்தது.
நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதியிலும், கடந்த மூன்று மாதங்களாக சாதகமான சூழல் உருவாகியுள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 32,338 கோடி ரூபாய் அளவுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்திருந்தது. ஜூலை மாதம் மட்டும், 10,677 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், தொடர் சவால்களை சந்தித்து வந்தது. தற்போது, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி இருக்கிறது. சர்வதேச அளவில், திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி மீது நன்மதிப்பு உருவாகியிருக்கிறது. புதிய ஆர்டர்களும் வரத் துவங்கி உள்ளன.
நடப்பாண்டில், 40,000 கோடி ரூபாய் என்ற இலக்கை நிச்சயம் அடைவோம். சாதகமான சூழல் நிலவுவதால், திருப்பூரின் நீண்டநாள் இலக்கான, ஒரு லட்சம் கோடி ரூபாய் என்ற வர்த்தக இலக்கை எளிதில் சென்றடையவும் இது உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Published on: 19th Aug 2024
Source: Dinamalar