பசுமை சார் உற்பத்தி குறித்து, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஐரோப்பா களமிறங்கியுள்ளது. திருப்பூரில் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு இதற்கான பயிற்சி துவங்கியது.
ஐரோப்பிய நாடுகள், இந்திய பருத்தி பின்னலாடைகளை விரும்பி இறக்குமதி செய்கின்றன. திருப்பூர் ஆடை உற்பத்தியில், ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும், 60 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகின்றன.
உலக நாடுகள் இடையே, 'வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி' என்ற, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத, பசுமை சார் உற்பத்தி குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.
ஐரோப்பிய நாடுகள், பசுமை சார் உற்பத்தி சார் வர்த்தகத்தை, 2027ம் ஆண்டில் இருந்து கட்டாயமாக்கப்பட்டு, அதற்காக சட்டமும் இயற்றப்பட்டு உள்ளது.
இந்தியா முழுதும் பசுமைசார் உற்பத்தி எதிர்பார்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஐரோப்பா திட்டமிட்டுள்ளது. அதற்காக, 'பேர் டிரேடு இந்தியா' என்ற அமைப்பை முகவராக நியமித்து, தொழில் நகரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த, நிதி ஒதுக்கிஉள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு, பசுமை சார் உற்பத்தி குறித்த பயிற்சி பட்டறையை, 'பேர் டிரேடு இந்தியா' அமைப்பு துவங்கியுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க, 'சஸ்டெய்னபிலிட்டி மற்றும் பிராண்டிங்' கமிட்டி தலைவர் ஆனந்த் கூறியதாவது:
நம் நாட்டில் முதன்முறையாக, திருப்பூரில் விழிப்புணர்வு பயிற்சி துவங்கியுள்ளது. விரைவில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது.
சட்ட ரீதியான பசுமை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், 50 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை தேர்வு செய்து, 6 லட்சம் ரூபாய் வரை ஊக்குவிப்பு நிதி ஒதுக்கவும் ஐரோப்பா முன்வந்துள்ளது.
இவ்வாறு கூறினார்.
Published on: 11th Aug 2024
Source: Dinamalar