''தனிப்பட்ட தகவல்களை வழங்கினால் மட்டுமே, 'சைபர் கிரைம்' மோசடி செய்ய முடியும்; இல்லாதபட்சத்தில், எந்தவிதமான மோசடியும் செய்ய முடியது,'' என, போலீஸ் துணை கமிஷனர் யாதவ் கிரீஷ் அசோக் பேசினார்.
தொழில்துறையினர் விழிப்புணர்வுக்காக, கம்ப்யூட்டர் அல்லது இணையதளத்தில் நடக்கும் 'சைபர் கிரைம்' குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது.
சங்கத்தின் கவுரவ தலைவர் சக்திவேல், சங்க தலைவர் சுப்பிரமணியன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், திருப்பூர் தெற்கு துணை கமிஷனர் (சைபர் கிரைம்) யாதவ் கிரிஷ் அசோக் தலைமையிலான குழுவினர், 'சைபர் கிரைம்' குற்றங்கள்; அவற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து விளக்கினர்.
சங்க தலைவர் சுப்பிரமணியன் வரவேற்று பேசுகையில்,''ஏற்றுமதியாளர், பல்வேறு வகையான 'சைபர் கிரைம் 'குற்றத்தில் சிக்கி பல்வேறு மோசடிகளை எதிர்கொள்கின்றனர்; இதுபோன்ற விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்,'' என்றார்.
கவுரவ தலைவர் சக்திவேல் பேசுகையில்,''போலீஸ் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குறிப்பாக, 'சைபர் கிரைம்' அதிகாரி ஒருவர், ஏற்றுமதியாளர்கள் சங்கத்துக்கு வந்து, விழிப்பணர்வு ஏற்படுத்துவதை, ஒட்டுமொத்த ஏற்றுமதியாளர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்,'' என்றார்.
துணை கமிஷனர் யாதவ் கிரிஷ் அசோக், 'சைபர் கிரைம்' இன்ஸ்பெக்டர்கள் சொர்ணவள்ளி, எஸ்.ஐ., சையல் ரபிக் ஆகியோர், கம்ப்யூட்டர் மற்றும் இணையதளம் வாயிலாக நடக்கும் 'சைபர்' குற்றங்கள்மற்றும் அவற்றில் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து பேசினர்.
'டிஜிட்டல் அரெஸ்ட்'
சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
போலியான மின்னஞ்சல்களை பயன்படுத்தி, ஏமாற்றியும், சர்வதேச கூரியர் நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தியும் மோசடி நடக்கிறது. இன்டர்நேஷவல் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு, போனில் அழைத்து பண மோசடி நடக்கிறது.
போலி வெளிநாட்டு நிறுவனங்கள், இணையதளங்கள் மூலமாக போலியான முன்மொழிவுகள் கூறியும் ஏமாற்றி வருகின்றன. 'இ-காமர்ஸ்' வழியாக, மொத்த ஆர்டர் கொடுப்பதாக கூறி, பேலி பங்குச்சந்தை முதலீடுகள் - IPO மூலமாக பணம் பறிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
தனி நபர்களை குறிவைக்கும் வகையில், 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனப்படும் புதிய வகை மோசடி செய்பவர்கள், தங்களை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு, சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் ஏமாற்றுகின்றனர். வீடியோ அழைப்பு செய்து பணம் பறிப்பதும் நடந்துள்ளது. பெறுநரின் அடையாளத்தை சரிபார்க்காமல், பணம் பரிவர்த்தனை செய்பவதை தவிர்க்க வேண்டும். 'கிரிப்டோ கரன்சி' முதலீடு செய்யுமாறு கேட்டும், பகுதிநேர வேலை கொடுப்பதாக கூறியும், கடன் மற்றும் பரிசு சலுகை அளிப்பதாக கூறியும் ஏமாற்ற வாய்ப்புள்ளது.
தொழில்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்; தேவையில்லாமல், தங்களது விவரங்களை தெரிவிக்க கூடாது. இதுபோன்ற மோசடிகள் நடப்பது தெரியவந்தால், 1930 என்ற எண்ணுக்கு புகார் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
------------------
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதில், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி பேசினார்.
விழிப்புணர்வு வேண்டும்!
முன்னதாக, துணை கமிஷனர் யாதவ் கிரீஷ் அசோக் பேசியதாவது:ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட தகவல்களை வழங்கினால் மட்டுமே, இத்தகைய மோசடி செய்ய முடியும்; இல்லாதபட்சத்தில், எவ்வித மோசடியும் செய்ய முடியது. தொழில்துறையினர் உட்பட, பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதையும் மீறி ஒருவர் மோசடிக்கு உள்ளாகும்பட்சத்தில், உடனடியாக, 'சைபர் கிரைம்' போலீசுக்கு, 1930 என்ற எண்களில் புகார் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
Published on: 06th Aug 2024
Source: Dinamalar