நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை திருப்பூர் தொழில் துறையினர் வரவேற்றுள்ள நிலையில், வேளாண்மை துறை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஏ.சக்திவேல்: (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக தென் மண்டல பொறுப்பாளர்): இந்த பட்ஜெட், எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு உருவாக்கப்பட்டுள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை, வங்கிக் கடனை தொடர வசதியாக ஒரு புதிய வழிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தித் துறையில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறைக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், பிணையம் அல்லது மூன்றாம் தரப்பு உத்தரவாதம் இல்லாமல் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ரூ.100 கோடி வரை பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படுவது, ஆடைத் தொழிலுக்கு ஆதரவாக இருக்கும்.
முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய தொழில்துறையின் கீழ் 12 புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களின் திறனை மேம்படுத்த 1000 பயிற்சி நிறுவனங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. வேலைவாய்ப்பில் மகளிரின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வரவேற்கத்தக்கது.
கே.எம்.சுப்பிரமணியன் (திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர்): வேளாண், அடித்தட்டு மக்கள், இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகிய 4 விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். புதிதாக வேலையில் சேரும் ஒவ்வொரு இளைஞருக்கும் ரூ.15 ஆயிரம் வரையிலான ஒரு மாத சம்பளம் 3 தவணைகளாக அளிக்கப்படும். இதன்மூலமாக, 2.1 கோடி இளைஞர்கள் பயன்பெறுவர்.
50 லட்சம் புதிய வேலைவாய்ப்பு, 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் புதிதாக வேலையில் அமர்த்தப்படும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு வைப்புநிதி மூலமாக, முதல் 4 ஆண்டுகளுக்கு மானியம் வழங்கப்படும். பின்னலாடை உற்பத்திக்கு தேவையான உப பொருட்களின் இறக்குமதி வரி குறைப்பு உள்ளிட்டவற்றை வரவேற்கிறோம்.
எம்.பி.முத்துரத்தினம் (திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம்): கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சிறப்பான பட்ஜெட். வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. ஜி.எஸ்.டி.யில் மாற்றம் செய்வோம் என்று கூறியிருப்பதால் சிறப்பான பட்ஜெட் தான். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களுக்கு முழுமையான பட்ஜெட்டாக இல்லை.
வைகிங் ஈஸ்வரன் (திருப்பூர் சைமா தலைவர்): விவசாயிகளுக்கான ஆதார விலையை உயர்த்துதல், வரும் 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குதல், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாடகை இல்லாத தங்கும் வசதிகள் உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம்.
ஈசன் முருகசாமி (தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்): நாட்டில் 70 சதவீதம் மக்கள் வேளாண்மையை சார்ந்துள்ளனர். 59 சதவீதம் மக்களுக்கான வேலைவாய்ப்பை வேளாண்மை துறை வழங்கி வருகிறது. இந்த நிதிநிலை அறிக்கை ரூ.47.66 லட்சம் கோடிகளாகும். அதில் வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது ரூ.1.5 லட்சம் கோடி மட்டுமே. வேளாண் துறைக்கும், விவசாயிகளுக்கும் நிதி ஒதுக்கீடு மிக மிக குறைவு. குறைந்தபட்சம் 20 சதவீதம் நிதி ஒதுக்கி இருக்க வேண்டும். வேளாண்மையை தொடர்ந்து மத்திய அரசு புறக்கணித்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
Published on: 24th July 2024
Source: Hindu Tamil Thisai