Tags

                        

அமெரிக்காவின், அரிசோனா ஸ்டேட் பல்கலை, அமிர்த விஸ்வ வித்யா பீடம் சார்பில், 'பேர் டிரேடு இந்தியா' மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் இணைந்து, 'வளம் குன்றா வளர்ச்சி நிலை' உற்பத்தி குறித்த பயிலரங்கு நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டரங்கில் நடந்த பயிலரங்கில், பசுமை ஆடை உற்பத்தி மற்றும் மறுசுழற்சி குறித்து விளக்கப்பட்டது.

 

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியை சேர்ந்த டாக்டர் ராஜேஷ் பச், டாக்டர் ரிம் ஜிம் அகர்வால் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். பல்கலை ஆராய்ச்சியாளர் ஊர்வதி பைத், அம்ரிதா ஸ்கூல் ஆப் பிசினெஸ் பேராசிரியர் பாலசுப்பிரமணியம், டாக்டர் பாயல் தாஸ், டாக்டர் பசந்த் ஆகியோர் பேசினர்.

 

பசுமை ஆற்றல் அவசியம்

 

வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியில், பசுமை ஆடை மற்றும் மறுசுழற்சி ஆடை உற்பத்தியில், திருப்பூர் முன்னோடியாக இருக்கிறது. 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில், 96 சதவீத தண்ணீர் மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. எதிர்கால ஜவுளித்தொழில் மற்றும் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்கு, பசுமை ஆற்றல் உற்பத்தி மிக அவசியம். அந்த லட்சயத்தை நோக்கி திருப்பூர் தொழில்துறை தொடர்ந்து முன்னேறி சென்று கொண்டுள்ளது.

- இளங்கோவன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர்

 

அதிகரிக்கும் வேலை வாய்ப்பு

 

உலக அளவில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்ப ஆலை என்ற நிலையை அடைய திருப்பூர் மிகுந்த சவால்களை எதிர்கொண்டது. திருப்பூரின் மொத்த வேலை வாய்ப்பில், 85 சதவீதம் பேர் பெண் தொழிலாளர் பயன்பெறுகின்றனர். வர்த்தக வளர்ச்சி காரணமாக, தொழிலாளர் தேவையும், வேலை வாய்ப்புகளும் மென்மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு திருப்பூரின் பங்கும் பெரியளவில் உள்ளது உறுதியானது.

- கோபாலகிருஷ்ணன், ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர்

 

கனியும் வர்த்தக வாய்ப்பு

 

பசுமை சார் உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து, தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நடந்துஐ வருகிறது. அத்துடன் பல்வேறு சமூக பணிகளையும் செய்து வருகிறோம். திருப்பூரின் சிறப்பு நிலை குறித்து, சர்வதேச அரங்குகளுக்கு கொண்டு சேர்த்து கொண்டிருக்கிறோம். இதன்மூலமாக, புதிய வர்த்தக வாய்ப்புகளை பெற, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

- குமார் துரைசாமி, ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர்

 

ஊக்குவிக்கும் மாணவர்கள்

 

வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி கோட்பாடுகளை பின்பற்றுவதில், இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. குறிப்பாக, திருப்பூர் பின்னலாடை தொழில்துறை, இந்த வளம் குன்றா வளர்ச்சி நிலைப்பாட்டில் சாதித்து வருவது நமக்கெல்லாம் பெருமையாக உள்ளது. இதனால், தொழில் வாய்ப்புகள் தொடர்ந்து திருப்பூரை நோக்கி வரும். எங்கள் மாணவர்கள், மறுசுழற்சியுடன் கூடிய வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர்.

- நாவா சுப்பிரமணியம், டீன், அம்ரிதா 'ஸ்கூல் ஆப் பிசினெஸ்'

 

எதிர்பார்ப்பை பூர்த்தி

செய்யும் திருப்பூர் இயற்கை சார்ந்த உற்பத்தியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றன. புதிய சட்டங்களை இயற்றி, 2023 முதல், 2034ம் ஆண்டு வரை, நான்கு காலநிலை உற்பத்தி மற்றும் அதற்கான முயற்சிகளை ஊக்குவித்து வருகின்றன. அந்நாடுகளில் புதிய சட்ட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் திருப்பூர் இயங்கி வருவதால், அந்நாடுகளின் இலக்கை எளிதாக அடைய முடியும்.- அரிசோனா ஸ்டேட்பல்கலை பிரதிநிதிகள்

 

Published on: 21st July 2024

Source: Dinamalar

e-max.it: your social media marketing partner