திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாரப்பாளையம் அருகே, மூளிக்குளம் 26 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. அணைக்காடு தடுப்பணையில் இருந்து, குளத்துக்கு தண்ணீர் வழங்கும் ராஜ வாய்க்கால், 2.50 கி.மீ., நீளம் செல்கிறது. பொதுப்பணித்துறை கண்காணிப்பில், வேர்கள் அமைப்பு, ஏழு ஆண்டுகளாக பராமரித்து வருகிறது.
நொய்யல் ஆற்றில் இருந்து, குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் நோக்கத்துடன், ராஜ வாய்க்கால் துார்வாரும் பணி நேற்று துவக்கி வைக்கப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அறக்கட்டளை மூலம், உறுப்பினர்கள் பங்களிப்புடன், அப்பணி துவங்கப்பட்டுள்ளது.
அணைக்காடு தடுப்பணை பகுதியில், நடந்த நிகழ்ச்சிக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொருளாளர் கோபாலகிருஷ்ணன், பொதுசெயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார்துரைசாமி முன்னிலை வகித்தனர், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பணிகளை துவக்கி வைத்தார்.
வேர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சந்தீப் கூறுகையில்,''வாய்க்கால் துார்வாரும் பணியை சிறப்பாக செய்ய, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் உதவி கேட்டோம். அறக்கட்டளை மூலமாக உதவி செய்வதாக, சங்க தலைவர் உறுதி அளித்தார். அதன்படி, பணிகளை துவக்கி வைத்துளளனர். மாநகராட்சி நிர்வாகம், தடுப்பணை அருகே, கால்வாய் பணியை விரைந்து முடிக்கும்; அடுத்த மாதம், குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லாம் என, கமிஷனரும் உறுதி அளித்துள்ளார்,'' என்றார். *
மூளிக்குளத்துக்கான ராஜ வாய்க்கால் துார்வாரும் பணி நேற்று துவங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர்.
மூளிக்குளத்தில் மண் திட்டு
ஆண்டிபாளையம், நஞ்சராயன் குளங்களில், மையப்பகுதியில், மண் திட்டுகள் அமைக்கப்பட்டு, மரம் வளர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பறவைகள், யாருடைய தொந்தரவும் இல்லாமல் தங்கி செல்கின்றன. அந்தவகையில், மூளிக்குளத்திலும், இரண்டு மண் திட்டு அமைக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது ஒரு மண்திட்டு அமைக்கப்பட்டுள்ளது; பறவைகள், அச்சமின்றி தங்கியிருக்க வேண்டும் என்பதற்காக, மண்திட்டு அமைத்து, மரக்கன்று வளர்க்கப்படும் என, வேர்கள் அமைப்பினர் தெரிவித்தனர்.
Published on: 22nd July 2024
Source: Dinamalar