Tags

'டாலர் சிட்டி' என்றழைக்கப்படும் திருப்பூர் நகரம், அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உட்பட உலகின் பல்வேறு நாடுகளுடன், வர்த்தக தொடர்பு வைத்துள்ளது. ஏற்றுமதி வர்த்தகம், நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகம் செய்யப்படுகிறது.

 

ஆடை உற்பத்தி, ஏற்றுமதியில் புதிய வளர்ச்சி ஏற்படுவது போல், திருப்பூரையும், கோவை விமான நிலையத்தையும் இணைக்கும் பாலமாக, புதிய 'ஷட்டில்' சேவை துவங்குவதும், பின்னலாடை பனியன் தொழிலில் ஒரு திருப்புமுனையே, என்கின்றனர் தொழில்துறையினர்.

 

ஆர்டர் விசாரணை, கண்காட்சிகள், தொழிற்சாலைகள் ஆய்வு, தொழிலாளர் வசதியை பார்வையிடுவது என, ஒவ்வொரு வாரமும், வெளிநாட்டினர் திருப்பூர் வந்து செல்கின்றனர். வர்த்தக முகமைகளில் இருந்து, வர்த்தக பிரதிநிதிகளும் தொழில் நிமித்தமாக வருகின்றனர்.

 

இவ்வாறு, விமான நிலையத்தில் இருந்து திருப்பூர் வருவோருக்கு, பாதுகாப்பான போக்குவரத்து சேவையை வழங்க, கோவையை சேர்ந்த இளைஞர்கள் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார்.

 

அதன்படி, கோவை விமான நிலையத்தில் இருந்து, திருப்பூர் வரை, 'ஷட்டில்' எனப்படும் போக்குவரத்து சேவையை, நவீன வாகனங்களை கொண்டு துவங்க இருக்கிறார். அதன் துவக்க விழா, பாப்பீஸ் ஓட்டலில் நடந்தது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவர் சக்திவேல், சங்க தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர், ஷட்டில் சேவையை துவக்கி வைத்தனர். நாளை முதல் (17ம் தேதி) 'ஷட்டில்' சேவை துவங்குமென அறிவித்துள்ளனர்.

 

வெளிநாடுகளில் மட்டுமே, இதுபோன்ற 'ஷட்டில்' சேவை கிடைக்கும். நம் நாட்டில் முதன்முறையாக, கோவை - திருப்பூர் இடையே துவங்கப்படுவது வரவேற்புக்குரியது. இதன்மூலம், ஏற்றுமதி வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மட்டுமல்ல, அனைத்து தொழில்துறையினரும் பயன்பெறுவர். 'லக்கேஜ்' வசதிகளுடன் வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளன. அதிநவீன கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய வாகனத்துடன், கோவை விமான நிலையம் - திருப்பூர் இடையே, 599 ரூபாய்க்கு வாகன சேவை வழங்குவது பாராட்டுக்குரியது.

 - சுப்பிரமணியன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர்

 

Published on: 16th July 2024

Source: Dinamalar

e-max.it: your social media marketing partner