திருப்பூர் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலையீட்டால், ஒரே மாதத்தில், 7.50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலுவை வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் சூழல் காரணமாகவும், திருப்பூரில் இருந்து அனுப்பிய சரக்கு வெளிநாடுகளில் தேக்கமானதாலும், ஏற்றுமதியாளருக்கு வர வேண்டிய பணம் கிடக்காமல், இழுபறி ஏற்பட்டது.
சில வியாபாரிகள், ஏமாற்றும் நோக்கத்துடன், பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர். பணம் கொடுக்காதவர்கள், உரிய பதில் அளிக்காமல் காலம் கடத்தி வந்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்காக, சங்கம் பணம் மீட்பு நடவடிக்கையில் இறங்கியது.
உறுப்பினர்களின் சிரமங்களை குறைத்து, பணத்தை மீட்டுத்தர வசதியாக, இருதரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்து, மொத்தமாகவோ, தவணை முறையிலோ நிலுவை தொகை வசூலித்து கொடுக்கப்படுகிறது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தவறான புரிதல்களை களைந்து, சுமூகமான வர்த்தக உறவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இறக்குமதி நிறுவனங்களின் பின்னணியை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப, சமாதானம் அல்லது சம்பந்தப்பட்ட நாடுகளின் நிதித்துறை சார்ந்த நடவடிக்கை என்று, தீர்வு காணப்படுகிறது. சங்கத்தின் நிறுவன தலைவர் சக்திவேல் மற்றும் சட்ட வல்லுனர் ஆலோசனைப்படி, சரியான ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல் பரிவர்த்தனையை சரியாக செய்த காரணத்தால், நிலுவை தொகையை வசூலிக்க முடிந்தது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
சங்க உறுப்பினர்கள் பாதிக்கப்படும் போது, உடனுக்குடன் சங்கத்தில் புகார் செய்கின்றனர். காலதாமதம் செய்யாமல், உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை முடிவு செய்து செயல் படுத்த, தனிக்குழு இயங்கி வருகிறது. கொடுக்க வேண்டிய பணம் கிடைக்காத நேரத்தில், செய்வதறியாமல் பரிதவிக்கும் உறுப்பினர்களுக்கு, தொடர் பேச்சுவார்த்தை வாயிலாக, தனி குழுவினர், சரியான வழிகாட்டுதல் வழங்கி வருகின்றனர்.
இத்தகைய பண பரிவர்த்தனை பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள, ஏற்றுமதி காப்பீட்டு கழகம் வாயிலாக காப்பீடு செய்துகொள்ள வேண்டும். சங்க உறுப்பினர்கள், தங்கள் வாடிக்கையாளரின் நிதிநிலை அறிக்கையை பெற்றுக்கொள்வதும் அவசியமாகிறது. புதிய வாடிக்கையாளராக இருந்தால், இந்தியாவில் வர்த்தகம் செய்கின்றனரா? திருப்பூரில் வர்த்தகம் செய்துள்ளனரா என்பதை கலந்துபேசி தெரிந்துகொள்ள வேண்டும்.
ஏற்றுமதியளர்கள், சட்டரீதியான ஆவணங்களை சரியான முறையில் பராமரித்து விழிப்பாக இருந்தால், இத்தகைய நெருக்கடியில் சிக்காமல் தவிர்க்கலாம். சங்க உறுப்பினர், தாங்கள் சந்திக்கும் பிரச்னைகளை, சங்கத்தில் தெரிவித்து உரிய தீர்வு பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
Published On : 21-03-2024
Source : Dinamalar