திருப்பூர்: ''இந்திய பருத்தி கழகம், ஜவுளித்துறையினருக்கு மட்டும் பஞ்சு விற்பனை செய்யவேண்டும்'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (TEA) கோரிக்கை விடுத்துள்ளது.
அச்சங்க தலைவர் ராஜாசண்முகம், பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதம்:பருத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதற்காகவே, இந்திய பருத்தி கழகம் உருவாக்கப்பட்டு, செயல்படுகிறது. இந்த கழகம், சந்தையில் விலை குறையும்போது, விவசாயிகளிடம் பஞ்சு கொள்முதல் செய்கிறது. விலை உயரும்போது, பஞ்சை விற்பனை செய்கிறது.ஜவுளித்துறையினர் மட்டுமின்றி, வர்த்தகர்களுக்கும், இந்திய பருத்தி கழகத்திடமிருந்து பஞ்சு வாங்குகின்றனர்.
வர்த்தகர்கள், சில மாதங்கள் பதுக்கிவைத்து, செயற்கை தட்டுப்பாடு உருவாக்கி, அதிக விலைக்கு பஞ்சு விற்பனை செய்கின்றனர்.வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதனால், உள்நாட்டில் பஞ்சு, நுால் விலை அதிகரிக்கிறது. நம்மிடமிருந்து பஞ்சு வாங்கும் போட்டி நாடுகள், குறைந்த விலைக்கு ஆடைகளை சந்தைப்படுத்தி, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றன.இந்திய ஜவுளித்துறை சார்ந்து, பல லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பஞ்சை, இந்திய பருத்தி கழகம், உள்நாட்டு நுாற்பாலை துறையினருக்கு மட்டும் விற்பனை செய்ய வேண்டும்.நுாற்பாலை அதிகமுள்ள நகரங்களில், பஞ்சுவர்த்தக மையங்களை ஏற்படுத்த வேண்டும். பஞ்சு வர்த்தக கொள்கையில் திருத்தம் கொண்டுவர, இந்திய பருத்தி கழகத்துக்கு, பிரதமர் அறிவுரை வழங்கவேண்டும். இதன்மூலம், உள்நாட்டில் பஞ்சு, நுால் விலைகள் சீராக தொடரும். ஆடை ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும்; வேலைவாய்ப்பு பெருகும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
Published On : 30-10-2021
Source : தினமலர்