திருப்பூர் : ''ஆடை நிறுவனங்களிலேயே 'சமர்த்' திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு பயிற்சி மையம் உருவாக்கப்படுகிறது'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய ஜவுளி அமைச்சகம், புதிய தொழிலாளருக்கு, ஆடை உற்பத்தி திறன் பயிற்சி அளிக்கும், 'சமர்த்' திட்டத்தை செயல்படுத்திவருகிறது. இந்த திட்டத்தில் 16 ஆயிரத்து 508 தொழிலாளருக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்க, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் அனுமதி பெற்றுள்ளது. கொரோனாவால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் சிரமங்கள் நீடித்தன.முதல்கட்டமாக, 93 தொழிலாளர், 'சமர்த்' திட்டத்தில், ஆடை தயாரிப்பு பயிற்சி முடித்துள்ளனர்; தற்போது, 200 தொழிலாளர் புதிதாக பயிற்சியில் இணைந்துள்ளனர்.
இந்த திட்டத்தில், நிறுவனங்களிலேயே பயிற்சி மையம் உருவாக்கப்பட்டு, புதிய தொழிலாளருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, பணி அமர்த்தப்படுகின்றனர்.உலகளாவிய நாடுகள் மத்தியில், சீனா மீதான வெறுப்பு அதிகரித்துள்ளது. அதனால், இந்திய ஆடை உற்பத்தியாளர்களுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.ஆடை உற்பத்தி துறையினர் கரம்கோர்த்து செயல்படவேண்டும்; பன்முகத்தன்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும். ஏற்றுமதியாளர் ஒவ்வொருவரும், வெளிநாட்டு வர்த்தகர் மத்தியில், தங்கள் நிறுவனத்தின் மதிப்பை உயரச் செய்யவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார். 3 ஆண்டு வேண்டாம் 15 நாள் போதும் ஏற்றுமதியாளர் சங்க, திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் முருகேசன், 'கடந்த காலங்களில் ஹெல்பராக இணையும் தொழிலாளி, நுட்பங்களை அறிந்து, டெய்லராக மாறுவதற்கு மூன்று ஆண்டுகள் வரை தேவைப்பட்டது.'சமர்த்' திட்டத்தில் பயிற்சி பெறுவதன்மூலம், புதியவர்கள், 15 நாட்களில் முழுமையான டெய்லராக மாறிவிடலாம்,' என்றார்.ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் செந்தில்குமார், நிர்வாக செயல் அதிகாரி சக்திவேல் உடனிருந்தனர்.
Published On : 26-08-2021
Source : Dina Malar