மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடந்த 14.06.2018 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவையில் 'ஜவுளித்தொழிலின் வளர்ச்சியை தமிழ்நாட்டில் மேலும் ஊக்குவிக்கும் விதமாக, தமிழகத்தில் முதல் முறையாக அடுத்தாண்டு தமிழ்நாடு அரசின் சார்பாக கோயம்புத்தூரிலுள்ள கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்' என்று அறிவித்தார்.
அதன்படி, 2019-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 27 முதல் 29 முடிய மூன்று நாட்கள் கோயம்புத்தூர், கொடிசியா அரங்கத்தில் பிரம்மாண்டமாக பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி நடைபெற உள்ளது. தமிழக அரசின், கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறையின் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதன் முன்னோட்டமாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நவம்பர் 30ம் தேதி கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை முதன்மை செயலர் திரு. குமார் ஜெயந்த், இ.ஏ.ப., அவர்கள் தலைமையில் தமிழகத்தின் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த நூல், பின்னலாடை, கதர் மற்றும் கைத்தறி ஆடை உற்பத்தியாளர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
திரு. குமார் ஜெயந்த், கூட்டத்தில் பேசியதாவது, இந்தியாவில் தமிழகம் தான் ஜவுளித்துறையின் தலைமையாக இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள புதிய திட்டங்கள், புதிய கண்டுபிடிப்புகள் அவசியமாவதால் இதுபோன்ற கண்காட்சி மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்று தெரிவித்தார். மேலும் நவீன தொழில்நுட்பம், உபகரணங்கள், பன்னாட்டு சந்தை வாய்ப்பு ஆகியவற்றை அறிந்துக்கொள்ள இந்த கண்காட்சி மிகவும் உதவும் என்றார். மேலும் இந்த கண்காட்சியில் இந்திய ஜவுளித்துறை ஏற்றுமதியாளர்கள் பலர் பங்கேற்கின்றனர். இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வர்த்தகர்கள் (பையர்கள்) பலர் இந்த கண்காட்சியில் பங்கேற்பார்கள் என தெரிவித்தார்.
நமது பகுதியில் இருக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பெருமளவில் கண்காட்சியில் அரங்கம் அமைக்கவேண்டும் என்று கேட்டுகொண்டார். ஆடை உற்பத்தியாளர்களின் தேவைகளையும் கேட்டு அறிந்துகொண்டார்.
இக் கூட்டத்திற்கு, கைத்தறி மற்றும் ஜவுளிதுறையின் கூடுதல் இயக்குனர் திரு.கர்ணன், கோவை மண்டல ஜவுளி ஆணையகத்தின் துணை இயக்குநர் திரு. பாலசுப்ரமணியன், திருப்பூர் டெக்ஸ்டைல் கமிட்டியின் உதவி இயக்குனர், திரு. சந்திரன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர், திரு.ராஜா சண்முகம், துணைத்தலைவர் திரு.பழனிச்சாமி, பொதுசெயலாளர் திரு.டி ஆர் விஜயகுமார், மற்றும் திருப்பூர் சைமா, நிட்மா, திருப்பூர் சாயப்பட்டறை சங்கம், டீமா, சிஐஐ, இந்தியா நிட் ஃபேர் அசோசியேஷன், தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் மற்றும் பல சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.