திருப்பூர் : ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் பாதிக்கப்படுவதால், ரிசர்வ் வங்கி ஏற்றுமதி மறுநிதி திட்டத்தை வங்கிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்றுமதி மறுநிதி திட்டம்
ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதன் மூலமாக வங்கிகள், தொழில் நிறுவனங்களுக்கு கொடுத்த கடனுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:-
பணவீக்கம் அதிகரித்து வருவது, மக்களிடம் வாங்கும் திறன் குறைதல், பொருளாதார மந்தநிலை மற்றும் வெளிநாட்டு பணத்தின் ஏற்ற இறக்கம் ஆகியவற்றால் உலக வர்த்தகம் கடினமான கட்டத்தை கடந்து வருகிறது. குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் பண மதிப்பு குறைவாக உள்ள நாடுகளில் ஏற்றுமதி கடன் விகிதங்களில் மேலும் அதிகரிப்பு செய்தால் நமது போட்டியாளர்களிடம் இருந்து சமாளிக்க முடியும்.
ரிசர்வ் வங்கி, ஏற்றுமதி மறுநிதி திட்ட வசதியை வங்கிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதிக்கடனை ரூபாயில் வழங்க வங்கிகள் ஊக்குவிக்க வேண்டும். அதே தொகையை ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கியால் மறுநிதியளிப்பு செய்ய வேண்டும். இந்த முறையால் உலக பொருளாதாரத்தில் நமது ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான போட்டித்தன்மையை வழங்க, ஏற்றுமதிக்கடனுக்கான வட்டிச்செலவை குறைக்கும்.
வட்டி சமன்படுத்தும் திட்டத்தின் கீழ் வட்டி மானியத்தை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். அமெரிக்க டாலரின் அதிக ஏற்ற இறக்கத்தின்போது எந்தவிதமான ஹெட்சிங் செலவும் இல்லாமல் இருப்பது ஆறுதல் அளிக்கிறது என்றார்.
வங்கிக்கடன் வட்டி மானியம்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.90-ல் இருந்து 6.25 ஆக அதாவது 0.35 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக வங்கிகள் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கும். கொரோனா பாதிப்பு, உக்ரைன் போர் சம்பவம் உலக பொருளாதாரத்தில் மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடந்த 4 மாதமாக வங்கி கடன் வட்டி மானிய விகிதத்தை குறைத்துள்ளதால் போட்டி நாடுகளுடன் போட்டியிடுவதில் சிரமம் உள்ளது.
கொரோனா காலத்தில் இருந்ததை போல் வங்கி கடன் வட்டி மானிய விகிதத்தை ஏற்றுமதியாளர்களுக்கு 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும். ரிசர்வ் வங்கி, ஏற்றுமதி மறுநிதி திட்ட வசதியை அறிமுகப்படுத்த வேண்டும். ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தாலும், ரிசர்வ் வங்கி ஏற்றுமதியாளர்களுக்கு வங்கிகள் மூலமாக மறுநிதி திட்டத்தை செயல்படுத்தும்போது, பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. வெளிநாட்டு ஆர்டர்களையும் தைரியமாக எடுத்துச்செய்ய முடியும் என்றார்.
Published On : 08-12-2022
Source : Daily Thandhi