திருப்பூர்: ''நுால் விலை சீராக இருந்தால் திட்டமிட்டபடி உற்பத்தியை முடிக்கலாம்; உற்சாகத்துடன் ஆர்டர்களை பேசி ஒப்பந்தம் செய்ய முடியும்'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்ரமணியன் கூறினார்.
பருத்தி சீசன் துவங்கிய பிறகும், விளைவிக்கப்பட்ட பருத்தி மார்க்கெட்டுக்கு வர, காலதாமதம் ஏற்படுகிறது; கடந்த ஆண்டை போன்றே விலை உயர்ந்தால், கூடுதல் விலை கிடைக்குமென விவசாயிகள் எதிர்பார்ப்பதும் முக்கிய காரணம்.
குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து பருத்தி வரத்து மந்தமாகவே இருக்கிறது. வரத்து குறைவதால், பஞ்சு விலையும், ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது. கடந்த மாதம் முதல் வாரம், ஒரு கேண்டி(356 கிலோ) பஞ்சு விலை, 65 ஆயிரம் ரூபாயாக இருந்தது; கடைசி வாரம், 70 ஆயிரம் ரூபாயையும் கடந்துள்ளது.
பருத்தி வரத்து அதிகரித்தால், பஞ்சு விலை மீண்டும் குறைந்து, 65 ஆயிரம் ரூபாயில் நிலைகொள்ளும் என, ஜவுளித்துறையினர் காத்திருக்கின்றனர்; பஞ்சு விலை, லேசான ஆட்டத்துடன் இருந்தபோதும், நுால் விலையில் மாற்றம் இல்லை என்பதால், பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன்:
இங்கிலாந்துடன், வரியில்லாத வர்த்தக ஒப்பந்தம் உருவானால், திருப்பூருக்கான ஆர்டர் அதிகரிக்கும். ஆஸ்திரேலிய ஒப்பந்தமும், புதிய வாய்ப்புகளை வழங்கும். கடந்த சில வாரங்களாக, அமெரிக்க, ஐரோப்பிய ஆர்டர்களை கைப்பற்ற தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஆர்டர் ஒப்பந்தம் செய்யும்போது, நுால் விலை சீராக இருந்தால் திட்டமிட்டபடி உற்பத்தியை முடிக்கலாம். நுால் விலை உயராமல், நிலையாக இருப்பதால், உற்சாகத்துடன் ஆர்டர்களை பேசி ஒப்பந்தம் செய்ய முடியும்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன்:
பருத்தி சீசன் துவங்கிய பிறகும், கேண்டிக்கு, 8,000 ரூபாய் வரை விலை வேண்டுமென, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவராமல் காத்திருக்கின்றனர். பருத்தி வரத்து தற்போது குறைவாக இருந்தாலும், டிச., மாதம் நிச்சயம் அதிகரிக்கும்; நுாலிழைகள் தேவை அதிகரிக்காததால், நுால் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. நுால் விலை உயராததால், ஆர்டர் பேச்சுவார்த்தைக்கு ஆரோக்யமான சூழலை உருவாகியுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம்:
பருத்தி வரத்து துவங்கும் போது, திடீரென பஞ்சு விலை உயர்ந்தது என்று புரியவில்லை. பஞ்சு பதுக்கல் இல்லாமல், மார்க்கெட்டுக்கு வரவும்; விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கவும், பஞ்சு விலை ஆறு மாதகாலம் சீரான நிலையில் இருக்கவும், மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும். இந்திய பருத்திக்கு, சர்வதேச அளவில் வரவேற்பு அதிகம் என்பதால், நுால் விலை சீராக இருந்தால், புதிய ஆர்டர்களை தைரியமாக பெற்று, உற்பத்தியை துவங்க முடியும்.
திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ரவிச்சந்திரன்:
பருத்தி சீசன் துவங்கும் என்பதால், நுால் விலை மேலும் குறையுமென எதிர்பார்த்தோம். வரும் வாரங்களில், பஞ்சு விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் நுால் விலை மேலும் குறையும் என காத்திருக்கிறோம்.
Published On : 03-12-2022
Source : Dina Malar