திருப்பூர்:தமிழக அரசு அறிவித்தபடி, 10 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பூர் ஏற்றுமதி குழுமம் அமைக்கும் முயற்சிகளை துவக்குவது என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல் செயற்குழு கூட்டம் நேற்று, சங்க அலுவலகத்தில் நடந்தது. தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் சக்திவேல், பொதுச் செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணை தலைவர்கள் ராஜ்குமார், இளங்கோவன், இணை செயலாளர்கள் சின்னசாமி, குமார் துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர் ஏற்றுமதி வர்த்தக மேம்பாட்டுக்கான அரசு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அரசு திட்டங்கள் வாயிலாக கூடுதல் சலுகைகள் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழக அரசு பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, திருப்பூர் ஏற்றுமதி குழுமம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மொத்தம், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதற்கான பணிகள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஏற்றுமதி வளர்ச்சி குழுமம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது, தமிழக அரசு மூலமாக ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. சங்க நிர்வாக குழு, அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேசி, திருப்பூர் ஏற்றுமதி குழுமம் அமைக்கும் முயற்சியை வேகப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
Published On : 11-10-2022
Source : Dinamalar