Tags

திருப்பூர், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்பாலைகளிடம் இருந்து நேரடியாகவும், வர்த்தகர்களிடம் இருந்தும் பின்னலாடை நிறுவனத்தினர் ஆடை உற்பத்திக்கு ஒசைரி நூலை கொள்முதல் செய்கின்றனர்.

கொரோனா தொற்றுக்கு பின் தற்போது ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் இருந்து திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது. 

மேலும் விஜயதசமி, தீபாவளி மற்றும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ், ஜனவரி மாதம் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து தொடர்ச்சியாக பண்டிகை காலம் வருவதால் திருப்பூரில் உள்ள உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் குவிகின்றன. இதனால் ஆடை தயாரிப்புக்காக பின்னலாடை துறையினர் அதிக அளவு நூல்களை கொள்முதல் செய்ய தொடங்கி உள்ளனர்.

இது குறித்து நூல் உற்பத்தியாளர்கள் கூறுகையில்:

அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் வெளிமாநில வர்த்தகரிடம் இருந்து திருப்பூர் உள் நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது. ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சிறப்பான வகையில் ஆர்டர் கிடைத்து வருகிறது. 

இதனால் உள்நாட்டில் நூல் வர்த்தகம் சூடுபிடித்துள்ளது. நூல் ஏற்றுமதியும் சீராக நடந்து வருகிறது. நூற்பாலைகளிடம் நூல் இருப்பு இல்லை என்ற நிலையில் வர்த்தகம் நடைபெறுகிறது. 

அதேசமயம் ஆடை உற்பத்தியாளர்களுக்கு தட்டுப்பாடு இன்றி ஒசைரி நூல் வழங்கப்படுகிறது. வரும் நவம்பர் மாதம் சந்தைக்கு புதிய பருத்தி வரத்து தொடங்கும். எனவே நூல் விலை மாற்றமின்றி இதே நிலையில் தொடரும் என்றனர்.

கடந்த 2018-19ம் நிதி யாண்டில் ரூ.27ஆயிரத்து 650 கோடி வர்த்தகத்தை எட்டிய திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, கொரோனாவால் 2019-20ம் நிதியாண்டில் ரூ.27ஆயிரத்து 280, 2020-21ம் நிதியாண்டில் ரூ.24ஆயிரத்து 750 கோடி ரூபாயாக  சரிந்தது. 

முதல் அலை  ஓய்ந்ததால் 2021-22ம் நிதியாண்டு தொடக்கம் முதல், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி நிலைக்கு திரும்பியது. ஆனால் மே மாதம் உருவான 2-வது அலையால்  வர்த்தகம் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்தது. 

தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனிடையே நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.10ஆயிரத்து 835 கோடியை எட்டியுள்ளது.

இந்த நிதியாண்டின் மொத்த வர்த்தகம் ரூ.28ஆயிரம் கோடியை எட்டிப்பிடித்து விடும் என பனியன் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

Published On : 28-09-2021

Source : மாலைமலர்

e-max.it: your social media marketing partner