Tags

திருப்பூர்: பஞ்சு விலை தொடர்ந்து அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. ஒரு கேண்டி (356 கிலோ) பஞ்சு விலை ரூ.95 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனால் நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் ஜவுளி, ஆடை உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பஞ்சுக்கு விதிக்கப்பட்டு வரும் வரியை நீக்க வேண்டும் என மத்திய அரசிடம் பின்னலாடைத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசு (சுங்கவரித்துறை) பஞ்சு இறக்குமதிக்கான வரியை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு திருப்பூர் பின்னலாடை துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த, கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை மத்திய அரசு ரத்து செய்தது. அதை பின்பற்றி, பஞ்சு இறக்குமதிக்கான 11 சதவீத சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம்.

அதன்படி 6 மாதங்களுக்கு பஞ்சுக்கான சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறோம். ஆஸ்திரேலியாவுடன் பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் செய்தது போல் ஐரோப்பியா, கனடா, அரபுநாடுகள் உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதை விரைவுபடுத்த வேண்டும்.வரும் 2030ம் ஆண்டுக்குள், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் ரூ.7.50 லட்சம் கோடியாக உயரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில், தொழில் துறையினர் சந்தித்த பிரச்சினைகளை மத்திய அமைச்சர்களிடம் நேரில் எடுத்துரைத்தோம். விவசாயிகளிடம் இருந்த பருத்தி விற்கப்பட்ட நிலையில் இறக்குமதிக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டி விட்டது.

வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை, பஞ்சு இறக்குமதிக்கு சுங்கவரி கிடையாது. இதன் மூலம் விசாரணையில் உள்ள ஆர்டர்களை தைரியமாக ஏற்க முடியும். கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூர் தொழில்துறை பல்வேறு சவால்களை சந்தித்தது. தற்போது மீண்டும் பனியன் தொழில் வளர்ச்சி பெறும் என புத்துணர்வும், நம்பிக்கையும் பிறந்துள்ளது என்றார்.

Published On : 15-04-2022

Source : மாலை மலர்

e-max.it: your social media marketing partner